கடலூரில் குடும்ப நட்பில்லத்தில் இயற்க்கைப்பிரசவத்தில் பிறந்த என் சொந்த ஊர் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அறுகில் (ஆதனூர்) பாச்சபாளையம் கிராமம் . விவசாயக்குடும்பம் . இரண்டு அண்ணன்கள் மூன்று தங்கைகள்.
மூத்த அண்ணன் பிறப்பிலேயே ஊமை . எங்கள் தந்தை அவரை சென்னையில் ஒரு செவிட்டூமைப்பள்ளியில் படிக்க வைத்தார். ஐந்தாம் வகுப்புக்கு மேல் வெளி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றதால் அப்பா தனியே அவரை அனுப்ப விரும்பாமல் கிராமத்துக்கே அழைத்துவந்து தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.
(He was a well built intelligent and affectionate person. But at the age of 16 (January 1957) God took him away through a watery grave. It was a terrible shock for us and our fathers health took a downward trend)சின்ன அண்ணாவை சித்தியுடைய ஊருக்கு அனுப்பி அங்கு ஆரம்பக்கல்வி பயில வைத்தார்.
எனக்கு ஐந்து வயதாகும்போது விஜய தசமியன்று அட்சராப்பியாசம் செய்தார்கள். தரையில் நெல்லைப்பரப்பி அரி நமோஸ்து சிந்தம் என சொல்ல வைத்து என் சுட்டுவிரலைப்பிடித்து அனா ஆவன்னா எழுத வைத்தார்கள். பிறகு எங்கள் கிராமத்திலேயே இருந்த திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றேன் .
கிட்டத்தட்ட இந்த படத்தில் உள்ளது போன்ற ஒரு ஐயர் வீட்டு திண்ணையில்தான் அரிச்சுவடி வாய்ப்பாடு ஆத்திச்சூடி என்றெல்லாம் என் வயது பிள்ளைகளுடன் படித்தேன்.
அப்பா சின்ன அண்ணாவை கடலூரில் நாங்கள் பிறந்த குடும்ப நட்பில்லத்தில் தங்கவைத்து புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்.என்னையும் சித்தியின் ஊருக்கு அனுப்பி அங்கு வீட்டிலேயே ஒரு உபாத்தியாயரிடம் படிப்பைத்தொடர வைத்தார்
1953 ஆம் ஆண்டு என்னையும் கடலூரில் அண்ணனுடன் அதே பள்ளியில் சேர்த்தார். ஆனால் ஐந்தாம் வகுப்பில் சேர்க்காமல் நான்காம் வகுப்பில் சேர்த்தார். பிறந்த தேதியையும் வயது போதாதோ என எண்ணி 1.3.44 என்று கொடுத்துவிட்டார் அப்பா.
(Those days birth certificates were not in vogue. So I had lost one academic year and my retirement also got advanced by 10 months)